மஹிந்தவின் தோல்விக்கு பஷிலே காரணம் : எஸ்.பி




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் தோல்விக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உட்பூசல் ஏற்படுவதற்கும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவே காரணமென அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

‘போரை வெற்றிகொண்டு, சுதந்திரக் கட்சியை பெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றவர் என்ற பெருமை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையே சாரும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது உண்மைதான். எனினும், மஹிந்தவின் அரசியல் செல்வாக்கு சரிவதற்கு பஷில் ராஜபக்ஷவே பிரதான காரணமென நாமல் ராஜபக்ஷவே குறிப்பிட்டுள்ளார். இதிலும் உண்மையுள்ளது. மஹிந்த மீது சுதந்திரக் கட்சியினருக்கு அதிருப்தி ஏற்படுவதற்கும், கட்சியில் உட்பூசல்கள் ஏற்படுவதற்கும் பஷிலின் பலவந்த போக்குகளே காரணம். அவ்வாறான நிலையில், தற்போது புதிய கட்சியின் பிரதான செயற்பாட்டாளராக பஷில் செயற்படுவது எமக்கு மகிழ்ச்சியையே தருகிறது.

வட மத்திய மாகாண முதலமைச்சராக இருந்த பிரேமலால் திஸாநாயக்க, பஷில் ராஜபக்ஷவின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்தார் என்ற காரணத்திற்காக, அவரை பஷில் திட்டமிட்டு தோற்கடித்து அவருக்கு முதலமைச்சர் பதவியை கிடைக்காமல் செய்தார்.

தேர்தல் காலத்தில் சுவரொட்டிகளுக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இலட்சக்கணக்கில் செலவிட்டு, மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டார். முன்னொருபோதும் இல்லாத வகையில் கடந்த தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு, வட பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதற்கு மஹிந்தவின் சகோதர்களது இனவாத போக்குகளே காரணம். இனியும் கட்சியின் தலைமைப் பொறுப்பை மஹிந்த ஏற்றால் வட பகுதி மக்களின் வாக்குகள் எமக்கு கிடைக்காமல் போகும். தனித்து, பௌத்தர்களின் வாக்குகளால் மாத்திரம் எம்மால் வெற்றிபெற முடியாது.

தமது கடும்போக்குவாத செயற்பாடுகளால் சுதந்திரக் கட்சியினரின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டுள்ள பஷில் ராஜபக்ஷ, தற்போது புதிய கட்சியில் இருக்கின்றார். அதனால், வேறு எந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் புதிய கட்சியில் இணைந்துகொள்ள மாட்டார்கள். மஹிந்தவின் தோல்விக்கு யார் காரணம் என்ற இந்த உண்மையை அறிந்துகொண்டால், சுதந்திரக் கட்சியிலிருந்து யாரும் விலகிச்சென்று புதிய கட்சியில் இணையமாட்டார்கள்’ என்றார்.
Share this article :
சமீபத்திய செய்திகள்
முகப்புத்தகத்தில் லைக் செய்யுங்கள்
 
Support : Website | Mohamed Hasni | Mohamed Solution
Proudly powered by Rajarata Media
Copyright © 2016. my desgin - All Rights Reserved